அமாவாசை

ஆறு வயதுக் குழந்தை

வெண்மை ஆடையை

தூசு தட்டி போட்டுக் கொண்டு

தீபட்ட காகிதம் சுருளாவதைப் போல்

சுருண்ட புத்தகத்தைச்

சின்ன கையில் எடுத்துக் கொண்டு

பள்ளிக் கூடும் செல்கின்றான்.

ஆசிரியர்,

நிலா நிலா ஓடிவா என்கின்றார்.

மாணவர்கள்

கிளிப் பிள்ளையாகின்றனர்.

ஆனால்,

இவன் மட்டும்

ஊமையாகிவிட்டான்.

ஆசிரியரின்

கொடுங் கண்ணுக்குக்

கொடுந்தேளாய் நின்றான்.

கொம்பு

இவனைச் சுவை பார்த்தது.

இருப்பினும்

இவன் ஊமையாகவே இருந்தான்.

கொம்புக்குச்

சுவை புளித்துவிட்டது.

இவனோ

சிந்தித்துக் கொண்டிருக்கின்றான்

ஆசிரியருக்கு ஆச்சரியம்.

என்னவென்றார்?

நிலாவைப் பாடி புளித்துவிட்டது

நிலவிடம் போகவேண்டும் என்றான்

கோபம் ஆசிரியருக்கு

போக முடியாதே என்றார்

முடியாததை நான்

பாட மாட்டேன் என்றான்

ஆசிரியருக்குக் கண்கன் சிவப்பாயின.

நிலவைப் பார்க்க ஆசை என்றான்.

இரவில் வரும் என்றார்.

என் வீட்டிற்கா என்றான்.

ஆம், உன் தாயைக் காட்டச்சொல் என்றார்.

பள்ளி முடிந்ததும்

இரவை நினைத்தே

வீடு சேர்ந்தான்.

இரவும் வந்தது

ஆனால், நிலவு வரவில்லை.

ஆம், அன்று அமாவாசை.

கருத்துகள்